×

ஆரணி நகராட்சியில் அனுமதியின்றி பொதுமக்கள் அமைத்த குடிநீர் குழாயை அகற்ற முயற்சி-பெண்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி

ஆரணி : ஆரணி நகராட்சிக்குட்பட்ட 1 வார்டு பெரியார் நகர் பகுதியில் உள்ள மணியம்மை வீதி பகுதியில்  சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  அப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில்  குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில், மணியம்மை வீதியில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா இல்லாததால், நகராட்சியில் வரி செலுத்த முடியவில்லை.

இதனால், நகராட்சிக்கு  வரி செலுத்தியவர்களுக்கு மட்டுமே  குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்படுறது.
மேலும்,  அப்பகுதி  மக்களின்குடிநீர் தேவைக்காக  நகராட்சி சார்பில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. இதில் ஒரு ஆழ்துளை கிணறு பழுது ஏற்பட்டதால் குடிநீருக்காக சிரமப்பட்டு வந்தனர். இதனால், பழுதடைந்த ஆழ்துளை கிணறு சீரமைக்குமாறு  புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.   

இதனால், அப்பகுதி மக்கள் பெரியார் நகர் பகுதியில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் பைப் லைனில்,  மணியம்மை தெருவை சேர்ந்த பொதுமக்கள் தனது சொந்த செலவில் நகராட்சி பைப்லைனுடன் குழாய் இணைப்பு இணைத்து நேற்றுமுன்தினம்  2 இடங்களில் பொது குழாய் அமைத்தனர்.தகவலறிந்து வந்த  நகராட்சி ஊழியர்கள்  குழாய், பைப்லைன்  அகற்ற முயன்றனர். இதனால்,  நகராட்சி ஊழியர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து,  காலிக்குடங்களுடன் தெருவில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், நகராட்சி ஊழியர்கள்  குழாயை அகற்றாமல் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், நகராட்சி ஊழியர்கள் மணியம்மை வீதியில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த  குழாயை அகற்ற அதிகாரிகள் நேற்று அங்கு சென்றனர். அப்போது நகராட்சி ஊழியர்கள் குழாயை அகற்ற வருவதை அறிந்து மக்கள்  குழாயை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை மீறி குழாய் இணைப்பை அகற்று முயன்றதால், திடீரென சில பெண்கள் வீட்டில் இருந்து மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றனர். அப்போது, தகவலறிந்து வந்த ஆரணி தாலுகா இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் தற்கொலைக்கு முயன்றவர்களை தடுத்து நிறுத்தி, பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து, உங்கள் கோரிக்கைகளை முறையாக புகார் அளியுங்கள், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து நகராட்சி ஊழியர்கள் குழாய் மற்றும் பைப் லைன்களை  அகற்றாமல் திரும்பிச் சென்றனர். மேலும் நகராட்சி பைப் லைனில் அனுமதியின்றி பொதுமக்கள் அமைத்த குழாயைஅகற்ற நகராட்சி ஊழியர்கள்  சென்றதால் பெண்கள் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags : Arani , Arani: More than 100 families live in the Maniyamai Veedhi area of 1st Ward Periyar Nagar area under Arani Municipality.
× RELATED ஆரணி வட்டார போக்குவரத்து...